» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுகாதாரமான ஊராட்சி என்பது பொதுமக்களின் கையில் தான் உள்ளது : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு

சனி 29, மார்ச் 2025 4:20:55 PM (IST)



"சுத்தமான, சுகாதாரமான ஊராட்சி என்பது பொதுமக்களின்  கையில்தான் உள்ளது" என ஆவல்நத்தம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் இன்று(29.03.2025) மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும்போது தெரிவித்ததாவது:-"நீரின்றி அமையாது உலகெனின்” என்கிற உன்னத வரிகளுக்கேற்ப தண்ணீரே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. மேலும், தண்ணீர் விலை மதிப்பில்லா ஒரு பொருளாகவும் உள்ளதினால், நீடித்து நிலைத்து பல்லாண்டுகளுக்கு பயன்படுத்திடும் வகையில் அதனைப் போற்றி பாதுகாத்திட வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தினை "பனிப்பாறை பாதுகாப்பு (Glacier Preservation)” என்கிற சிறப்பு கருப்பொருளினையொட்டி கொண்டாட உள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைய, நாம் தனிமனிதனாக, குடும்பமாக, சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும். மழைநீரினை சேகரித்தல் வேண்டும். சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் வேண்டும். உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல் வேண்டும். மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் வேண்டும். 

நிலத்தடி நீரை செறிவூட்டுதல் வேண்டும். நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுத்தல் வேண்டும். மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் மற்றும் வீட்டுக்கொரு மரம் வளர்த்தல் வேண்டும். நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல் வேண்டும். நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல் போன்றவை மூலம் நாம் தண்ணீரை பாதுகாக்க முடியும்.

உங்களது ஊராட்சியில் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை பொதுமக்களாகிய நீங்கள் இந்த கிராமசபைக் கூட்டத்தில் தெரிவித்தால் அதன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பரிசீலனை செய்யப்படும். மேலும், தங்களது ஊராட்சியை சுத்தமான மற்றும் சுகாதாரமான ஊராட்சியாக பார்த்துக்கொள்வது பொதுமக்களாகிய உங்களது கையில்தான் உள்ளது. குழந்தைகளுக்கு கல்வியென்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்களா என்பதை உறுதி செய்வது உங்களது கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.

இந்த கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தல், ஜல் ஜீவன் திட்டம், தீன்தயாளன் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகள், கிராம ஊராட்சிகளில் உள்ள சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் பங்களிப்புடன் ஏழை எளிய மக்களின் நலிவுற்ற தன்மையையும் வறுமையையும் குறைப்பதற்கான கிராம செழுமை மீட்சித் திட்டம் ஆகிய பொருள்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் விவாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் வெப்பம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறிகள் மற்றும் வெப்பத்தாக்கத்தை எதிர்கொண்ட செயல்பாடுகள் என்ற துண்டு பிரசுரங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தத்தெடுப்பது குறித்த விவரம் அடங்கிய துண்டு பிரசுரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

வேளாண்மைத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் 2024-25ன் கீழ் திரவ உயிர் உரங்கள் மற்றும் இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 2 நபர்களுக்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துபெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.

இந்த கிராமசபைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசிர், மாவட்ட சுகாதார அலுவலர் (கோவில்பட்டி) மருத்துவர் வித்யா விஸ்வநாதன், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராமமக்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory