» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிதாக பிறந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டார் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்..!!

வெள்ளி 28, மார்ச் 2025 10:22:16 AM (IST)



மணப்பாடு கடற்கரைப் பகுதியில் வனத்துறை சார்பில் சேகரிக்கப்பட்டு புதிதாக பிறந்துள்ள ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கடலில் விட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதியில் இன்று (28.03.2025) வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆமை குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சியில், கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடற்கரையோரம் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டுவரும் குஞ்சு பொரிப்பகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு, புதிதாக பிறந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு கடற்கரையோரப் பகுதிகளில் ஆலிவ் ரெட்லி என்று அழைக்கப்படும் ஆமைகள் இட்ட முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்பகங்களில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, ஆமை முட்டைகள் பொரித்து வெளி வர தொடங்கியுள்ளது. 

புதிதாக பிறந்துள்ள ஆமை குஞ்சுகளை வனத்துறை சார்பில் கடலில் விடும் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பங்கேற்றுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த வகையான ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் முதல் வார காலகட்டங்களில் கடற்கரையோரம் அதிகாலையில் முட்டையிடுவது வழக்கம். இந்த ஆண்டு 1940 முட்டைகள் இட்டுள்ளது. இந்த ஆமைகள் இதே இடத்தில் தான் மீண்டும் மீண்டும் முட்டைகள் இடும். 

குறிப்பாக, இன்று கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்கூட இதே கடற்கரைப்பகுதிக்கு வந்து தான் முட்டைகள் இடும் என்பது இயற்கையிலேயே ஒரு அதிசயமான நிகழ்வு. இந்த வகையான ஆமைகள் பசுபிக் கடற்கரை வரை நீண்ட பயணம் மேற்கொள்கிறது. ஆமைகள் முட்டையிடும் நிகழ்வு பொதுவாக கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் மணப்பாடு கடற்கரையோரப் பகுதிகளில் நடைபெறுகிறது. 

மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டிணம் கடற்கரைகளைப் பொறுத்தவரையில் 18 இடங்களில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 3 குஞ்சு பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றையதினம் சுமார் 170க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. மேலும், மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் கடல் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடல் ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வனகளப் பணியாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பின்னர், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கடலில் மீன் பிடிக்கும்போது எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையில் சிக்கும் ஆமைகளை மீட்டு மீண்டும் கடலில் விட்டு தன்னார்வ பணிகளை மேற்கொண்டமைக்காக தருவைக்குளம், வீரபாண்டியபட்டிணம், மணப்பாடு மற்றும் குலசேகரபட்டிணம் பகுதியைச் சேர்ந்த தலா ஒரு மீனவருக்கு தலா 5000 ரூபாய் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ஆனந்த்Mar 28, 2025 - 02:01:36 PM | Posted IP 172.7*****

அமை குஞ்சுகள் என்றால் என்ன

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors






Thoothukudi Business Directory