» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை மீட்டுருவாக்கம் செய்ய நடவடிக்கை : மேலாண்மை இயக்குநர்

செவ்வாய் 18, மார்ச் 2025 9:17:00 AM (IST)



தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்க்கான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு செய்தியார்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தமிழ்நாடு பவர் ஜெனரேசன் கார்பரேசன் லிமிடெட் ஒரு குழு அமைத்து சேதாரங்களை அணுகி மிக விரைவில் மீட்டுருவாக்கம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. 

மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை ஆகியோரின் உறுதுணை இருந்ததினால் பெரிய தீ விபத்தாக இருந்தாலும் கூட மிக வேகமாக அந்தத் தீயினை அணைக்க முடிந்தது. கிட்டத்தட்ட நேற்று மாலையோடு இந்த தீ முழுவதுமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த தீ எரிவது முடிந்திருந்தாலும் வெப்பத் தாக்கம் அதிகம் இருப்பதால் உள்ளே சென்று சேதாரங்களை மதிப்பிட முடியாத சூழ்நிலை உள்ளது. எங்களுடைய பொறியாளர்கள் வெப்பத்தாக்கம் குறைந்த பின்னர் சேதாரங்களை மதிப்பிட உள்ளார்கள். அதற்காக ஒரு குழு அமைத்துள்ளோம். 

பாவையிட்டு ஆராய்ந்ததில் யூனிட் 3இல் இருக்கக்கூடிய பாதிப்புகள் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது. அதனால் யூனிட் 3 உடனடியாக ஒரு சில நாட்களிலோ அல்லது ஒரு சில வாரங்களிலோ மீட்டுருவாக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மீதம் உள்ள இரண்டு யூனிட்களில் சேதாரங்களை மதிப்பிட்டு எந்த மாதிரியான சேதாரம் உள்ளது. அதாவது குறிப்பிட்ட கேபிள்களில் சேதாரம் இருந்தால் அதை மாற்றி உடனடியாக சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 

இந்த மாதிரி பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு என்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளெல்லாம் கூடுதலாக எடுக்கலாம் என்பதற்காகவும் இந்த குழு மூலமாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனல் மின்நிலைய யூனிட்களைப் பொருத்த வரைக்கும் சேதாரம் என்று சொல்வது பல பாகங்களில் உள்ளது. மொய்லர் டர்பைன் ஜெனரேட்டர் என சொல்லக்கூடிய அந்த முக்கியமான பகுதிகளில் எல்லாம் எந்த விதமான சேதாரமும் இல்லை. 

சேதாரம் என்பது பவர் செல்லக்கூடிய கேபிள்களில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பதை முழுவதுமாக ஆராய்ந்த பிறகுதான் தெரியவரும். ஏற்கனவே கூறியது போல் தற்போது வெப்பம் அதிகம் உள்ளதால் உள்ளே சென்று மதிப்பிட இயலவில்லை. ஆகையால் இதனைப்பொறுத்த வரை பவர் ஜெனரேசன் கார்பரேசன் லிமிடெட், TANGEDCO-ல் இருந்து மிக விரைவில் மீட்டுருவாக்கம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 

TANGEDCO-வை பொறுத்த வரைக்கும் தூத்துக்குடி அனல்மின் நிலைய அலகு என்பது மிக முக்கியமான பவர் ஸ்டேசன். 3வது யூனிட்டை பொறுத்தவரை மிக வேகமாக இயக்கலாம் என எதிர்பார்க்கிறோம். யூனிட் 1 மற்றும் 2 இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீட்டுருவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுதான் பவர் ஸ்டேசன்கள் இயங்குகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை பொறுத்தவரை தற்போது இது இயங்கலாம் என்று மாநில அளவிலும் மத்திய அரசின் பல்வேறு ரெகுலேட்டரி அத்தாரிட்டி–ன் அனுமதியுடனும் இயங்குகிறது. 

ஊழியர்கள் மாற்றம் இருக்கும் என்பது வதந்தி. உண்மையற்ற தகவல். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை பொறுத்தவரை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குத்தான் அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 15.03.2025 அன்று இரவு 10 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. 1050 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்கள் அங்கு செயல்பட்டு வருகிறது. யூனிட் 1ல் கேயில் வயர்கள் இருக்கக்கூடிய அந்தப் பகுதிகளில் தீ விபத்து முதலில் ஏற்பட்டது. அதனால் யூனிட்கள் 1 மற்றும் 2 நிறுத்தப்பட்டு அடுத்தபடியாக யூனிட் 3 நிறுத்தப்பட்டு உள்ளது. தீ வெளியில் பரவாமல் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளில் பொறியாளர்கள், பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து செயல்பட்டுள்ளார்கள். 

இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் நமது தூத்துக்குடியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வந்து தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்பிறகு தீயை அணைப்பதற்கான கூடுதல் வாகனங்கள் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை என பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பக்கத்தில் இருக்கக் கூடிய போர்ட் அத்தாரிட்டி, ஸ்பிக் ஆகியோரிடம் தீயணைப்பு தொடர்பான உபகரணங்கள் பெறப்பட்டு முழுமையாக தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அந்த சமயத்தில் நான், கோட்டாட்சியர், அதிகாரிகள் என அனைவரும் பார்வையிட்டு அதற்கு உரிய கூடுதல் ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். 16-ல் இருந்து 18 மணி நேரம் தீயை அணைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போதைக்கு TANGEDCO, பவர் கார்பரேசன் லிமிடெட் தலைவர் வந்து பார்வையிட்டு என்ன நிலைமை என்பதனை ஆராய்துள்ளார். யூனிட் 1 மற்றும் யூனிட் 2 பகுதிகளில் உள்ள கேபிள்கள் தீயில் சேதமடைந்ததாக தெரிய வருகிறது. 

இது தவிர யூனிட் 3 இல் குறைந்த அளவிலான சேதங்கள்தான் ஏற்பட்டுள்ளது அதனை விரைவாக சரி செய்ய இயலும் என்பதனை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலும் பணிகளுக்காக தொழில்நுட்பக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory