» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)
தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் சட்டப்பேரவை முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள்,தாலூகா அலுவலகம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், போக்குவரத்து காவல்துறை அலுவலகம்,சிறைத்துறை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புள்ளியல்துறை, கருவூலம் என 10க்கும் மேற்பட்ட அரசு துறைச்சார்ந்த நிறுவனங்கள் ஒரு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதி. இந்த அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சாலை என்பது குண்டு,குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர்.
கடந்த 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக நீதிமன்ற வளாகம், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு மழைநீர் தேங்கியுள்ளது மட்டுமின்றி, சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு மழையின் போதும் இது போன்று நடந்து வரும் நிலை உள்ளது. இந்த அரசு வளாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இருந்த போதிலும் அரசு அலுவலக வளாகத்தில் சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவது மட்டுமின்றி, விபத்துக்களும் நடந்து வருகிறது. எனவே பலமுறை போராடியும், மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் சாலையை சீரமைக்கமால் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்து வரும் 19ந்தேதி சென்னையில் சட்டப்பேரவை முன்பு அல்வா கொடுக்கும் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில் பல ஆண்டுகளாக சீரமைக்கபடமால் இருக்கும் அரசு வளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கமால் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் வரும் 19ந்தேதி சென்னையில் சட்டப்பேரவை முன்பு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கட்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சூழ்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகரத் தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் கோவில்பட்டி அரசு அலுவலக வளாகச் சாலையை சீரமைத்து புதுப்பிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து வரும் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றம் முன்பு கட்சி சார்பில் நடைபெற இருக்கும் அல்வா கொடுக்கும் போராட்டத்திற்கு வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரு குழுக்களாக சென்னை செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் அய்யாதுரை, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிங்கராஜ், ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் திருமுருகன், நகர துணைத் தலைவர் தங்கபாண்டியன், நகர பொதுச்செயலாளர் காளிராஜ் வட்டார துணைத் தலைவர் தங்கராஜ்,ஆறுமுக கனி, கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
