» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்!!
வியாழன் 9, ஜனவரி 2025 3:40:33 PM (IST)
திருவைகுண்டம் பகுதியில் சிறு பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் மாவட்ட நிர்வாகத்துடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகளின் அறக்கட்டளை இணைந்து மேற்கொள்ளும் பேரூர் குளத்தின் பாசன வாய்க்கால் மற்றும் கஸ்பா குளத்தின் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றினை இன்று (09.01.2025), மாவட்ட ஆட்சியர்க.இளம்பகவத், துவக்கி வைத்ததை தொடர்ந்து, திருவைகுண்டம் வட்டம் பேட்மா நகரம் எம்.ஆர்.ஜி மஹாலில் டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகளின் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற தூர்வாரப்பட்ட சிறு பாசன குளங்கள் மற்றும் கால்வாய்களின் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிறப்புரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கிராமங்களில் உள்ள குளங்கள் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் மூலம் கிடைக்கும் நீரை நம்பியே உள்ளனர் தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் மற்றும் ஆழ்வார்திருனகரி வட்டாரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நீர்நிலைகளை தூர்வார வேண்டியதன் அவசியத்தை கிராம மக்களுடன் பல்வேறு கூட்டங்களின் மூலம் Srinivasan Services Trust (SST) புரிந்து கொண்டது தான் சிறப்பு.
இந்தியாவில் செயல்பட்டு வரும் Standard Chartered Bank (SCB), SST யால் தொடங்கப்பட்ட நீர் சேமிப்பு முயற்சிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் நீர்நிலைகளை பாதுகாக்கும் முயற்சிகளுக்காக SCB ரூ.1.80 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. SCB இந்தியாவின் பழமையான வெளிநாட்டு வங்கிகளில் ஒன்றாகும்.
டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி மற்றும் டி.வி.எஸ் ஹோல்டிங்ஸின் சமூகப் பிரிவான SST, கடந்த 28 ஆண்டுகளாக இந்தியாவில் 2500 கிராமங்களில் நீர் பாதுகாப்பு, கிராமப்புற அரசு உள்கட்டமைப்பை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல், பெண்களின் முன்னேற்றம், விவசாயம் மற்றும் கால்நடை வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில், கிராம மக்கள், SCB மற்றும் SST ஆகியவை இணைந்து 6 குளங்கள் மற்றும் 6 பாசன வாய்க்கால்கள் உட்பட 12 நீர்நிலைகளை தூர்வாரியுள்ளன. 90 கி.மீ.க்கு மேல் வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 கிராமங்களில் 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த தூர்வாரும் பணியை கிராம மக்களின் பங்களிப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் செய்து முடிக்கப்பட்டது. மேலும், வரும் காலங்களில் பராமரிப்பு பணிகளை கிராம மக்களால், மாவட்ட நிர்வாக உதவியுடன் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக SST. ரூ.16 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. 45 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு 6000 க்கு மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார். இந்நிகழ்ச்சியில், மண்டல இயக்குநர்கள் விஜயகுமார், முருகன், கள இயக்குநர்கள் பாபு திரு நந்தகோபால்,திரு இரத்தினசங்கர், வட்டாச்சியர் திருவைகுண்டம் சுரேஷ் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.