» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுவோம் : அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்
வியாழன் 9, ஜனவரி 2025 3:16:57 PM (IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுவோம் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க கழகத்தினருக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி. கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கத்தோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவருடைய ஆட்சியில்தான் மகளிர் உரிமைத் தொகை மாதம் 1000 பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், கலைஞர் கனவு இல்லம், குடிநீர், சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தியது, அதிக வேலைவாய்ப்பு வழங்குவதிலும் அதிக தொழிற்சாலைகளை உருவாக்கியதிலும் அதிகப்படியான பெண் தொழிலாளர்கள் இருப்பதிலும் இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடம்.
இப்படி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எத்தனையோ நல்ல திட்டங்களை தினம், தினம் செயல்படுத்தி வரும் திராவிட மாடல் முதலமைச்சர் வருகிற தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவபொங்கல் திருநாளாக கொண்டாடிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று தமிழர் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழங்கள் தோறும் சமத்துவ பொங்கல் வைத்து கழகத்தின் இருவண்ணக் கொடியை புதிதாக ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், கழகத்தின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடிட கழகத்தினர் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.