» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அங்கன்வாடி மைய பெண் ஊழியர் தற்கொலை : கடன் பிரச்சினையால் விபரீதம்
திங்கள் 6, ஜனவரி 2025 8:18:17 AM (IST)
தட்டார்மடம் அருகே கடன் பிரச்சினையில் அங்கன்வாடி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து முகமதியர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கலாவதி (39). இவர் சித்தன் குடியிருப்பில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
கலாவதி மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் சிலரிடம் கடன் வாங்கி இருந்தாராம். இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.