» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மாட்டு வண்டி : பார்வையாளர்கள் உற்சாகம்!
சனி 4, ஜனவரி 2025 12:45:37 PM (IST)
வைப்பாரில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், ஆட்டுகிடாய், LED டிவி என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பாரில், சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழாவை இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் திருவிழா போல கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டுமொத்த கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. அந்தவகையில் இன்று வைப்பார் - குளத்தூர் ECR சாலையில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, இராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி மற்றும் சிறிய மாட்டுவண்டி என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், ஆட்டுக்கிடாய், LED டிவி என ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். மேலும், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் இந்தாண்டில் நடைபெறும் முதல் மாட்டு வண்டி பந்தயம் என்பதால் இப்பந்தயத்தை காண ஏராளமான மாட்டு வண்டி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வைப்பார் கிராமத்தில் குவிந்து காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.