» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
திங்கள் 30, டிசம்பர் 2024 10:55:46 AM (IST)
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண் திட்டம்” விரிவாக்கத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.12.2024) தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவிகளுக்கு பற்றட்டைகளை (Debit Card) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் , பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை உருவாக்கிட இயலும் என்பதை உணர்ந்த நம் முதலமைச்சர் , பெண்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்கான வரலாற்றுச் சாதனை திட்டமான புதுமைப் பெண் திட்டத்தினை 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/ வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் துவங்கப்பட்டது முதல் தற்போது வரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயின்ற மாணவிகள் உட்பட சுமார் 4.25 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் டிசம்பர்-2024 மாதத்தில் 2.98 இலட்சம் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல், உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் சேர்க்கையை அதிகரிப்பதில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும், இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்திடவும் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டமானது மாபெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை ஊக்குவித்திடவும், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்து படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகை வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” என்னும் திட்டத்தினை முதலமைச்சர் 9.8.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கிடவும், கல்வி கற்கும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்த்திடவும், கற்கும் ஆர்வத்தை மெருகேற்றிடவும், பெற்றோரின் பொருளாதாரச் சுமைகளைக் குறைத்திடவும், குடும்பத்தின் வளர்ச்சியினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தின் கீழ் சுமார் 3.52 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு. தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவியர்கள் பயன்பெறுவர். அதேபோன்று பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
வருமான உச்சவரம்பு ஏதுமின்றியும், மற்ற கல்வி உதவித் தொகை திட்டங்களின் பயன்பெற்று வந்தாலும் (BC /SC/ST/ Minority Scholarship) மற்றும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இருந்தாலும் இந்த திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்த சமூகத்தில் பெண்களுக்கு எந்தவிதமான வாய்ப்பினை வழங்குகிறோமோ, அந்தவிதமான தலைமுறையைத்தான் உருவாக்க இயலும் என்பதற்கேற்ப, அடுத்த தலைமுறை முன்னோக்கிச் செல்ல மிக முக்கியமான திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகள் சுமார் 75,028 பேர் இணைய உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், உயர் கல்வி மூலம் பெறும் அறிவும், பொருளாதார சுதந்திரமும், மாணவிகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து, அவர்களது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைத் தேட ஊக்குவிப்பதோடு, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்யும் வாய்ப்பாக அமைகிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மகத்தான திட்டமான ”புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமானது” இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் மாணவிகளுக்கு பற்றட்டைகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4,680 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.மார்க்கண்டேயன், சி.சண்முகய்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பி.ஜெகன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையர் ஆர்.லில்லி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.