» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
ஞாயிறு 29, டிசம்பர் 2024 7:09:13 PM (IST)
தூத்துக்குடியில் ரூ.32.50 கோடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 32 கோடியை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட மினி டைட்டில் பார்க்கை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க தனியார் ஹோட்டலில் இருந்து வரும் போது சாலையில் இருபுறமும் நின்று பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கை அசைத்து வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் டைட்டில் பார்க்கை திறந்து வைத்தார். பின்னர் அவர் மினி டைட்டில் பார்க்கை பார்வையிட்டார். அப்போது தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகள் அவரிடம் டைட்டில் பார்க் சிறப்பு வசதிகள் மற்றும் புதியதாக செயல்பட உள்ள நிறுவனங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கினார்கள்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் தொழில்துறை அமைச்சர் ராஜா வரவேற்று பேசினார். தொடர்ந்து புதிய நிறுவனங்களுக்கு ஆணையை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. மார்க்கண்டேயன், சி. சண்முகய்யா, மாநகராட்சி மேயர் பி. ஜெகன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.