» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுவில் விஷம் கலந்து குடித்து பூ வியாபாரி தற்கொலை? போலீசார் விசாரணை!
ஞாயிறு 29, டிசம்பர் 2024 9:28:38 AM (IST)
கோவில்பட்டியில் பூ வியாபாரி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (59). இவர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. மேலும் அவரது வாயில் இருந்து விஷ மருந்து வாடை அடித்தது.
உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஈஸ்வரன் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈஸ்வரனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.