» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சீவிஜில் பாதுகாப்பு ஒத்திகை : போலி தீவிரவாதிகள் 6 பேர் சிக்கினர்
வியாழன் 21, நவம்பர் 2024 8:14:40 AM (IST)
தூத்துக்குடியில் சீவிஜில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் போன்று வேடமணிந்து வந்த 6 பேர் சிக்கினர்.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், பயங்கரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச், சீ விஜில் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடற்படை சார்பில் நேற்று காலை 8 மணி முதல் சீவிஜில் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் படகில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களிடம் அடையாள அட்டைகளை சரிபார்த்தனர். படகு உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
அதே நேரத்தில், மீனவர்களிடம் இருந்து கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகப்படும்படியாக 6 பேர் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து படகில் கடலுக்குள் செல்வதாக தெரிவித்தனர். உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழைய துறைமுகத்தில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக சென்ற படகை போலீசார் மடக்கினர்.
அந்த படகில் பயங்கரவாதிகள் போன்று தமிழக போலீசார் 3 பேரும், கடற்படையை சேர்ந்த 3 பேரும் இருந்தனர். அவர்கள் முத்தையாபுரம் கனநீர் ஆலை, பழையகாயல் ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை தாக்குவதற்காக கடலுக்குள் சென்றது தெரியவந்தது. இதனால் 6 பேரையும் போலீசார் கைது செய்து கரைக்கு அழைத்து வந்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) மாலை வரை நடக்கிறது.