» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
வியாழன் 21, நவம்பர் 2024 8:11:26 AM (IST)
கோவில்பட்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் நேற்று இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலுப்பையூரணியில் உள்ள மாடசாமி கோவில் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்களாம்.
போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மங்களபுரத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் தர்மராஜ் (23), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா மறவன் மங்களத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தினேஷ்குமார் (19) என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.