» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

வெள்ளி 15, நவம்பர் 2024 4:41:03 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (15.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டப் பணிகள் அனைத்தும் பொதுமக்களிடையே முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் துறை வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்றைய தினம் கழுகுமலை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் உள்ளுர் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலமாக கழுகுமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், 15 வது வார்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து, குடிநீரினை அருந்தி அதன் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கழுகுமலை பேருந்து நிலையம் அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும், சரவணைப்பொய்கை குளத்தில் ரூ.93 இலட்சம் செலவில் தூர்வாரும் பணி மேற்கொண்டு தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

பின்னர், நாலாட்டின்புதூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றும் நிலையத்திலிருந்து சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக கழுகுமலை பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகத்தின் அளவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, நாலாட்டின்புதூர் துணை சுகாதார நிலையத்தில் தீடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் புறநோயாளிகள் வருகைப் பதிவேடு, மருந்துப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணித் தாய்மார்களின் விவரங்கள் குறித்தும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உரிய தவணையில் நிதியுதவி வழங்கப்படுவது குறித்தும் கிராம சுகாதார செவிலியரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், கோவில்பட்டி நகராட்சிப் பகுதியிலுள்ள இராமசாமிதாஸ் நினைவுப் பூங்காவில் உள்ள உடற்பயிற்சிக்கூடம், அறிவுசார் மையம், சுகாதார வளாகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபாதையில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர், கோவில்பட்டியில் சுமார் 3.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.50 கோடி செலவில் நடைபெற்று வரும் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா, நகராட்சி செயற்பொறியாளர் சனல்குமார், செயற்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ராமசாமி, உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) ஹரிஹரன், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory