» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு : டிரைவர், கண்டக்டர் காயம்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:16:25 PM (IST)
திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் டிரைவர், கண்டக்டர் காயம் அடைந்தனர்.
கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை பாளையங்கோட்டை, மேலபுத்தனேரியை சேர்ந்த சுடலை மணி என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் கண்டக்ராக பணியில் இருந்துள்ளார். இந்த அரசு பஸ் அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த நவலெட்சுமிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளனர்.
இதில் கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே டிரைவர் சுடலை மணி சுதாரித்துக் கொண்டு பஸ்சை வேகமாக ஓட்டி உள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கியுள்ளது. இதில் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது. இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் பஸ்சை நிறுத்தி விட்டு இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன்பின்னர் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அரசு பஸ் டிரைவர் பயணிகள் அனைவரையும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூரில் கொண்டு இறக்கி விட்டு விட்டு ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டி.எஸ்.பி. மாயவன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.