» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நோன்புக் கஞ்சி காய்ச்சுவதில் முஸ்லிம்கள் இடையே தகராறு: குமரியில் பரபரப்பு!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:56:06 PM (IST)
கன்னியாகுமரியில் பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக முஸ்லிம்கள் இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளிவாசலை நிர்வாகம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக முஸ்லிம்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக இந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி-யான மகேஷ்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சூழலில் இன்று காலை நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிவாசல் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அப்போது இருதரப்பு முஸ்லிம்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கல்லாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். போலீஸார் முன்னிலையிலேயே ஆண்களும் பெண்களும் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் 5 பெண்கள், 5 ஆண்கள் காயமடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மோதலை கட்டுப்படுத்த கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.