» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும்படை சோதனையில் 20½ கிலோ கஞ்சா சிக்கியது : 6 பேர் கைது; கார் பறிமுதல்

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:28:30 AM (IST)



ஆறுமுகநேரியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்திய 20½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற காரை வழிமறித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அந்த காரின், நம்பர் பிளேட்டில் அரசு வாகனம் என்று எழுதப்பட்டு இருந்தது.

காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். கார் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 டிராவல் பேக்குகளில் மொத்தம் 20 கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை தமிழகம், கேரள மாநிலத்தில் விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த திருச்செந்தூர் ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் கீதன் (வயது 29), உடன்குடி கொத்துவாப்பா தெருவை சேர்ந்த செரீப் மகன் சாகுல் அமீது (27), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதுநகரைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் (29), இவருடைய மனைவி ஆர்த்தி (20), சண்முகம் மகன் ஹரிபாபு (30), கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னுல் ராபிக் மகன் செமியம் (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

கார் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்றும், கைதான கீதன், சாகுல் ஹமீது ஆகிய 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா கடத்தி பதுக்கியதாக பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆறுமுகநேரியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்திய 20½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory