» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:27:49 AM (IST)
சேவைக் குறைபாடு காரணமாக ஒப்பந்தகாரர் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி சிதம்பர நகர் துறைமுகத்தில் லஸ்கராக பணிபுரியும் ஆவுடையப்பன் என்பவர் திருநெல்வேலி சமாதானபுரத்திலுள்ள தனது வீட்டில் மாடிப்பகுதி கட்டுவதற்காக ஒரு ஒப்பந்தகாரரிடம் ஒப்பந்தம் செய்து அதன்படி பணம் செலுத்தியுள்ளார். ஓப்பந்தகாரரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை நல்லபடியாக முடித்து கட்டிடச் சாவியை ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் மனுதாரரிடம் பெற்ற பணத்தை வேறொரு கட்டுமான பணிக்காக பயன்படுத்தியதால் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்காமல் சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மனுதாரர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் குற்ற நடவடிக்கையை எடுக்க கூறி புகார் மனு அளித்துள்ளார். மேலும் இரண்டு தரப்பிற்கும் பொதுவான ஒரு பொறியாளரை வைத்து கட்டுமான பணியை ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில் ஒப்பந்தகாரர் கட்டுமான பணிச் செலவு மதிப்பை விட கூடுதலாக பணம் பெற்றுள்ளதால் அந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டுமென ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்புக் கொண்டபடி ஒப்பந்தகாரர் பணத்தையும் திரும்ப தரவில்லை. வீட்டு சாவியையும் ஒப்படைக்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆவுடையப்பன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூபாய் 5 இலட்சமும் அதற்கு ஆண்டு ஒன்றிற்கு 9 சதவீத வட்டியுடன் புகார் தாக்கல் செய்த நாளிலிருந்து வழங்க வேண்டும் எனவும் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 5,10,000 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.