» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழாவிற்கு ஜாதி ரீதியான உடை அணிந்து வர கூடாது : எஸ்பி எச்சரிக்கை!

சனி 7, அக்டோபர் 2023 11:08:07 AM (IST)குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 15.10.2023 முதல் 24.10.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கோவில் வளாகம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கீழ்கண்டவாறு அறிவித்துள்ளார்.
  
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடவுள் சம்மந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்மந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை. 

ஆனால் கடவுள் திருவிழாவில்  ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ எந்த வித அனுமதியும் இல்லை. அறுவறுக்க தக்க வகையில் நடந்து கொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்று சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்தவோ எவ்வித அனுமதியும் கிடையாது என்பதை தெரிவித்து கொள்வதுடன் மீறினால் சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் ஆட்களையோ - பக்தர்களையோ ஏற்றி வந்தால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுடைய வாகனங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு சட்டப்படியாக நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தினம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் உட்பட வெவ்வேறு விழாக்களின்போது அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என 316 வாகனங்கள் மீது மோட்டார் வாகனச்சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையின்படி வழக்குகள் பதிவு செய்து பல லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்து, பல வாகனங்களும் சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதியில் கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து சட்டப்படி உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வாகனங்களில் வந்து இறங்கி கடற்கரை சென்று கோவில் வந்து திரும்பி அவரவர் வாகனங்களுக்கு செல்லும் இடம் வரை சீருடை மற்றும் சாதராண உடைகள் அணிந்த ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
 
பொதுமக்கள் மற்றும் இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோர சட்ட விரோதமாக கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் தேங்குகின்ற நிலையை ஏற்படுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்பந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலி பெருக்கி பயன்படுத்தவோ, ஆபாசமான ஆடல் பாடல் போன்ற சினிமா இசை நிகழ்ச்சிகள் நடத்தவோ எவ்வித அனுமதியும் இல்லை. மீறினால் சம்மந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

8.பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஒட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் குறுக்கு, நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமலும், வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும், வாகனங்களை ஒழுங்காக சீரான முறையில் மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடங்களில் அதிக நேரம் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டோ பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன நிறுத்துமிடங்கள் அதிகமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து பொதுமக்களும் தசரா பண்டிகையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட  மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை  மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

Yobhuraj rajOct 7, 2023 - 12:32:06 PM | Posted IP 172.7*****

கோவில் அருகில் உள்ள உணவகங்களில் விழா முடியும் வரை சாப்பாடு விலை கம்மியா வாங்கனும்.அரசு/கோவில் சார்பா மூன்று வேலை அன்னதானம் வழங்க வேண்டும்.

Yobhuraj rajOct 7, 2023 - 12:28:29 PM | Posted IP 172.7*****

இது எல்லாம் சரிதான்.ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொது மக்களுக்கு உணவு தங்கும் வசதிகள் அதிகப்படுத்துனும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory