» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

புதன் 3, மே 2023 11:35:46 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெறுகிறது.

திருவிழாவின்  சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மே 3ஆம் தேதி) காலை கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் - முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர். தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. 



கீழ ரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், மாநகராட்சி ஆணையர் திணேஷ்குமார்,  கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, சுப்பிரமணிய சுவாமி மகமை செயலாளர் கந்தப்பன், உதவி தலைவர் ராமலிங்கம், மற்றும் தொழிலதிபர்கள் ஏ.வி.எம்.வி.மணி, ஏ.வி.எம்.முத்துராஜ், ஏ.பி.சி.வி.சண்முகம்  உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழரத வீதியில் இருந்து புறப்பட்ட தேருக்கு முன்பாக யானை, குதிரை அணிவகுப்புகள், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடந்தது. தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது. 



தேர் திருவிழா ஏற்பாடுகளை தேரோட்ட பவனிவிழா குழுவினர் மற்றும் திருக்கோவில் பிரதான பட்டர்கள் ஆர்.செல்வம் பட்டர், எம்.சங்கரபட்டர், எம்.சுப்பிரமணிய பட்டர், சி.சண்முகசுந்தரம் பட்டர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுண் போலீஸ் டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், ராஜாராம், மயில் முன்னிலையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

தமிழன்மே 3, 2023 - 05:43:02 PM | Posted IP 162.1*****

அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் நமது பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி அவர்கள் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது .

TUTICORIN MAKKALமே 3, 2023 - 04:23:57 PM | Posted IP 162.1*****

GOOD ARRANGEMENT BY THE COMMITTEE. WE WORSHIPPED அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர். குடிதண்ணீர் / குளிர்பானம் / மோர் பரிமாறிய கமிட்டி உறுப்பினர்களுக்கு தூத்துக்குடி இந்து மக்கள் சார்பில் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Tamilanமே 3, 2023 - 12:40:52 PM | Posted IP 162.1*****

Om Namashivaya....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory