» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி சம்பவம்: தேசிய ஆணைய தலைவர் நேரில் விசாரணை

வியாழன் 23, மார்ச் 2023 7:39:43 AM (IST)

தூத்துக்குடியில், விஷம் குடித்து தூய்மை பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் பணியை கவனித்து வந்தார். இந்நிலையில், அவரை மேற்பார்வையாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க, பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால், அவரை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சுடலைமாடன் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் சுடலைமாடனை நேரில் பார்த்தார்.

அவரது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு இருந்த, சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள், மகள் உமாமகேசுவரி ஆகியோரிடமும் விசாரித்தார். அதே போன்று சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோரிடமும் விசாரித்தார்.

பின்னர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் கூறியதாவது: உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் என்பவரை சாதியை கூறி இழிவுபடுத்தியதாலும், பதவி உயர்வு வழங்க மறுத்ததாலும், விஷம் குடித்துள்ளார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி முன்னாள் தலைவியை கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவியின் அனுமதி இல்லாமல் அவரது மாமியார் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட முடியாது.

எனவே, தற்போதைய பேரூராட்சி தலைவி மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று ஆணையம் சார்பில் வலியுறுத்துகிறோம். தூய்மை பணியாளர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களுக்கு புகார்களை தைரியமாக தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர் வாரியம் செயல்படாமல் உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநில அளவிலான ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் 11 மாநிலங்களில்தான் ஆணையம் உள்ளது. ஆகையால் தமிழகத்தில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மருத்துவமனை டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory