» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிராம சபைக் கூட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் - ஆட்சியர் உறுதி!!

புதன் 22, மார்ச் 2023 3:09:51 PM (IST)



கிராமசபைக் கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்பத்து கிராம ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில் கிராமசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தி நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும், தண்ணீரின் சிறப்பை எடுத்து சொல்வதற்கும், தண்ணீர் வீணாவதை தடுப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதை யொட்டி சிறுதானியத்தின் பயன்கள் குறித்தும் கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. நமது முன்னோர்கள் சிறுதானியங்களை அதிக அளவில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நமது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறுதானியம் பயிரிட தேயைவான வேளாண் இடுபொருட்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். வழக்கமாக வருடத்திற்கு 4 முறைதான் கிராம சபைக்கூட்டம் நடைபெற்று வந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை மூலம் வருடத்திற்கு 6 கிராம சபைக்கூட்டம் நடத்துவதற்கு உத்தரவிட்டதையடுத்து இன்று தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சியில் 15வது நிதிக்குழு, பள்ளிக்கட்டிடங்கள் கட்டும் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களிடம் தெரிவித்துள்ளோம்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு 403 ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம் இன்று நடைபெறுகறிது. நயினார்பத்து பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். இங்குள்ள பள்ளி கட்டிடம் மகளிர் திட்ட கட்டிடத்தில் இயங்கி வருவதால் புதிய கட்டிடப் பணிகளை மே 31க்குள் முடித்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

மேலும் நயினார்பத்து ஊராட்சியில் உள்ள நயினார்பத்து, இனாம் நயினார்பத்து தைக்காவூர், அம்மன்புரம் உள்பட 5 குக்கிராமங்களுக்கு ஒரே நியாய விலைக்கடை இருப்பதால் பொருட்கள் வாங்குவதற்கு சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கூட்டுறவுத்துறை சார்பில் வாகனங்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிராமத்தில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 10 கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவித்து கூடுதல் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட அறிவுறுத்தப்படும். இங்குள்ள 37 குடும்பங்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதால் பட்டா வழங்க இயலவில்லை.

தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வீடுகளுக்கு பட்டா இல்லாததால் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. நிலம், நீர், காற்று போல் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாகும். மின்வசதியின்றி படிப்பு பாதிக்கப்படுவதாக குழந்தைகளே நேரடியாக வந்து தெரிவித்தார்கள். மின்விசிறி, மின்விளக்கு ஆகியவை இயங்கும் சோலார் இணைப்புகள் இன்னும் 3 நாட்களில் செய்துதரப்படும். பட்டா பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

அதுபோல் கிராமங்களில் பேருந்து வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பேருந்து வசதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்கள் கூடுதலாக ஊதியம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். தற்போது ரூ.120 கூலி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோரிக்கை என்பதால் அரசிடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும். கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் என்ற உங்களது நம்பிக்கை காப்பாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,  தெரிவித்தார்.

கூட்டத்தில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, வேளாண் இணை இயக்குநர் பழனி வேலாயுதம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிசாமி, ஜாண்சிராணி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாலசிங், நயினார்பத்து ஊராட்சிமன்ற தலைவர் அமுதவல்லி மற்றும் பிற துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory