» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

ஞாயிறு 19, மார்ச் 2023 7:41:44 AM (IST)



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல கூட்டம் தூத்துக்குடியில் நேற்று மாலை நடந்தது. 

கூட்டத்துக்கு மண்டல தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியம், தூத்துக்குடி மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.காமராசு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் ஏ.அல்அமீன். கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் டி.சோலையப்பராஜா வரவேற்று பேசினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மே-5 மாநாடு குறித்து பேசினார். கூட்டத்தில் தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: வியாபாரிகளுக்கு கலைஞர் கருணாநிதி எப்போதும் ஆதரவாக இருந்தார். அதேபோன்று தற்போதும் அரசு ஆதரவாக இருக்கிறது. விக்கிரமராஜா அளித்த கோரிக்கையின் பேரில் செஸ் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்தில் கடை திறக்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்தார். நடைபாதை வியாபாரிகளுக்கும் அங்கீகாரம் கொடுக்க அவர் அறிவுறுத்தி உள்ளார். பாரம்பரியமான தொழிலை செய்வது நல்லது. நம் குழந்தைகளுக்கு அதனை சொல்லி கொடுத்து வியாபாரத்தில் ஈடுபடுத்தும்போது, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது: வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை தந்து இருக்கிறீர்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வருகிற மே 5-ந் தேதி ஈரோட்டில் வணிகர் முழக்க மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும். மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், உணவு வணிகர்கள் தொழில் செய்ய முடியாது.

ஈரோடு மாநாடு தொடர்பாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகிறோம். இன்னும் 2 கூட்டங்கள் தான் உள்ளது. அதன்பிறகு மாநாடுதான் இலக்கு. தொடர்ந்து சென்னையில் பேரமைப்பு கட்டிட திறப்பு விழா நடைபெற உள்ளது. மஞ்சள் நகரமான ஈரோட்டில் மாநாடு நடைபெறுவதால், பேரமைப்பின் இருவர்ண கொடியில் மஞ்சளை இணைத்து மூவர்ண கொடியாக மாற்றி உள்ளோம். மாநாடு எழுச்சியோடு நடைபெற வேண்டும். அனைத்து வியாபாரிகளும் ஒரு நாள் விடுப்பு கொடுத்து ஈரோட்டில் திரண்டு குரல் கொடுத்தால் மத்திய, மாநில அரசுகளின் வணிகர்களை பாதிக்கும் சட்டங்களை அகற்றக்கூடிய மாநாடாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், வேளாண் விளைபொருள் சட்டங்களில் உரிய மாற்றங்களை கொண்டு வந்து, வேளாண் சந்தைக்கு வெளியே விற்கப்படும் பொருட்களுக்கு செஸ் வரி முழுமையாக அகற்றப்பட வேண்டும். ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் கன்னியாகுமரி மண்டலத்தில் இருந்து 25 ஆயிரம் வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது, வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயர்வை உற்பத்தி மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி திரும்பப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன், நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் பி.டி.பி.சின்னத்துரை, நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், இணைச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், இளைஞர் அணி கிளைச்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.ஆனந்த பொன்ராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory