» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடையை மீறி சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் : ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

ஞாயிறு 22, டிசம்பர் 2024 9:40:37 AM (IST)

தியேட்டரில் கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரம் குறித்து தெலுங்கானா சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி போலீசாரின் தடையை மீறி நடிகர் அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்னதாக 4-ந் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு சென்றார்.

அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள், தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் ஒரு ஊழியர் ஆகியோர் மீது சிக்கடப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை கடந்த 13-ந் தேதி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் இந்த வழக்கில் அவருக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, 14-ந் தேதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ. அக்பருதீன் ஓவைசி இந்த பிரச்சினையை எழுப்பினார். அதற்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சி திரையிடப்பட்ட 2 நாட்களுக்கு முன்னதாக சிக்கடப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சந்தியா தியேட்டர் நிர்வாகம் நடிகர்-நடிகைகளின் வருகையையொட்டி பாதுகாப்பு கேட்டு கடிதம் வழங்கியது. 

ஆனால் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதி குறுகியதாக இருப்பதை சுட்டிக்காட்டியும், கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ள சிரமத்தை எடுத்துக்கூறியும் போலீசார் அதற்கு அனுமதி வழங்க மறுத்தனர். நடிகர்-நடிகைகளுடன் சிறப்பு காட்சியை நடத்த வேண்டாம் என தியேட்டர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதையும் மீறி, அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டார். தியேட்டருக்குள் நுழைந்த அவரது காரை நோக்கி செல்ல ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் மூளையில் காயம் அடைந்து கோமாவில் உள்ளார்.

சிறுவன் 20 நாட்களாக கோமா நிலையில் இருந்தும், ஒரு திரையுலக பிரபலம் கூட ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. ஆனால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டுக்கு திரையுலக பிரபலங்கள் படையெடுக்கிறார்கள். சிகிச்சையில் இருக்கும் சிறுவனுக்கு பதிலாக நடிகருக்கு ஆறுதல் கூறுவது ஏன்? அல்லு அர்ஜுனுக்கு கண்ணோ, காலோ போய்விட்டதா?

இத்தகைய பொறுப்பற்ற தன்மையை பொறுத்துக்கொள்ள முடியாது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே மாநிலத்தில் இனி எந்த புதிய படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது. டிக்கெட் விலை உயர்வையும் அரசு அனுமதிக்காது. இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory