» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

திங்கள் 30, செப்டம்பர் 2024 4:23:24 PM (IST)



திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என்று சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, முதல்வர் சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார். அதேநேரம், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து ஆந்திர ஐகோர்ட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்பட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, "லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாதபோது சோதனைக்கு அனுப்பினோம். 2-வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது" என ஆந்திர அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் போது, முதல்-அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள்? எஸ்ஐடி குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?

மேலும், திருப்பதி லட்டு பிரசாதத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை. திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும், என நீதிபதிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education


New Shape Tailors








Thoothukudi Business Directory