» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உடைந்து விழுந்த இடத்தில் சத்ரபதி சிவாஜி சிலை மீண்டும் நிறுவப்படும்: அஜித் பவார் சபதம்
சனி 31, ஆகஸ்ட் 2024 12:50:07 PM (IST)
ராஜ்கோட் கோட்டையில் உடைந்து விழுந்த இடத்தில் சத்ரபதி சிவாஜியின் பிரம்மாண்ட சிலை புதிதாக நிறுவ சபதம் ஏற்கிறேன் என்று அஜித் பவார் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிச. 4-ம் தேதிமராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஆக.26-ம் தேதி சிலை இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல்என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேடையின் வடிவத்தை மட்டுமே மாநில பொதுப்பணித் துறை மூலம் இந்தியக் கடற்படையினரிடம் தான் ஒப்படைத்ததாகவும், சிலைக்கும் தனக்கும் நேரடி தொடர்பில்லை என்றும் சேதன் பட்டீல் விசாரணையின்போது கூறியதாகத் தெரியவந்துள்ளது. தானேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் சிலை வடிவமைப்பில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை வீற்றிருந்த இடத்தை நேற்று நேரில் பார்வையிட்டார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார். இதையொட்டி அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: விரைவில் இதேஇடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிரம்மாண்ட சிலை புதிதாக நிறுவப்படும் என்று சபதம் ஏற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.