» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மோடி அரசு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 8:35:55 AM (IST)

பெண்கள் பாதுகாப்பு பற்றி டெல்லி செங்கோட்டையில் பேசுவதுடன் சரி. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மோடி அரசு எதுவும் ெசய்யவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. வேதனையானது, கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிர பிரச்சினை. அந்த குற்றங்களை தடுப்பது நாட்டுக்கு பெரிய சவால்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் சென்று இப்பிரச்சினைக்கு ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். பெண்களுக்கு சம உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை, அச்சமற்ற சூழ்நிலைதான் தேவை.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிரான 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நாள்தோறும் தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 22 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பயம், அச்சுறுத்தல் காரணமாக நிறைய குற்றங்கள் பதிவு செய்யப்படுவது இல்லை.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரைகளில் பலதடவை குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அவரது அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களின் நடத்தையை பா.ஜனதா குறை சொல்லி வந்துள்ளது. இது வெட்கக்கேடானது. ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்று சுவர்களில் எழுதி வைப்பதால், சமூக மாற்றம் வந்து விடாது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நம்மால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாதா? நமது குற்றவியல் நீதிமுறை முன்னேறி உள்ளதா? குற்றங்களை மறைக்க அரசு முயற்சிக்கவில்லையா? உண்மை வெளிவருவதை தடுக்க உடல் தகனம் செய்ய போலீசார் கட்டாயப்படுத்தவில்லையா?

கடந்த 2012-ம் ஆண்டு, ‘நிர்பயா’ கொலை சம்பவம் நடந்தபோது, நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. அவற்றை நம்மால் இன்று முழுமையாக அமல்படுத்த முடியுமா? பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளை தடுக்கும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா?

பெண்களுக்கு அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory