» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரு சிறையில் விதிமுறை மீறல்: நடிகர் தர்ஷனை பெல்லாரிக்கு மாற்ற முடிவு
புதன் 28, ஆகஸ்ட் 2024 11:22:42 AM (IST)
பெங்களூரு சிறையில் விதிமுறை மீறல் புகார் எதிரொலியாக கன்னட நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
பெங்களூரு: கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொலைசெய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருடன் பவித்ரா கவுடா, மேலாளர் நாகராஜ்உட்பட 17 பேர் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தர்ஷன் சிறையில் தேநீர் கோப்பையுடன் சிகரெட் புகைத்தவாறு நண்பர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் செல்போனில் பேசுவது போன்ற வீடியோவும் வெளியானதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தர்ஷன் உள்ளிட்ட 4 பேர் மீது விதிமுறையை மீறியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பணியில் அலட்சியமாக இருந்ததாக சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி உட்பட 9 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா நேற்று சிறைத்துறை டிஜிபி மாலினிகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். விதிமுறையை மீறிய கைதிகள் மீதும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் தர்ஷனை பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே சிறைத்துறை நிர்வாகம், தர்ஷனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரவுடி வில்சன் கார்டன் நாகா, குள்ளா சீனா ஆகிய இருவரையும் வேறு சிறைக்கு மாற்றக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.