» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: மத்திய அரசு நிபந்தனை

புதன் 28, ஆகஸ்ட் 2024 8:21:06 AM (IST)

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதி ரூ.573 கோடியை நிறுத்திவைத்தும், தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ் மாநில அரசின் பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு நிதியாண்டும் ஒதுக்கப்படுகிறது. அந்தந்த மாநில அரசுகள், இந்த நிதியோடு, மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து, 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதிலும் தேசிய கல்வி கொள்கையின் கீழ் வரக்கூடிய ‘பி.எம். ஸ்ரீ’ பள்ளித்திட்டத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இணைய மறுத்ததில் இருந்து பல்வேறு சிக்கல்களை பள்ளிக்கல்வித்துறை எதிர்நோக்குகிறது.

கடந்த ஆண்டிலும் இந்த நிதி நிறுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுத்திவைப்பு

நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியாக தமிழக அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,434 கோடி ஆகும். அதுதவிர மீதமுள்ள ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தொகை 4 தவணைகளாக வழங்கப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான முதல் தவணையான ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்டு மாதம் நிறைவு பெற உள்ள நிலையிலும் இதுவரை நிதி ஒதுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தியும், மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, தேசிய கல்வி கொள்கையின் கீழ் வரும் ‘பி.எம். ஸ்ரீ’ பள்ளித்திட்டத்தில் தமிழக அரசு இணையாதது ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் நடந்த மறு ஆய்வுக்கூட்டத்தில் கூட, ‘பி.எம். ஸ்ரீ’ பள்ளித்திட்டத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, ‘பி.எம். ஸ்ரீ’ பள்ளித்திட்டத்தை ஏற்றுக்கொண்டால், தேசிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே அதில் இருந்து விலக்கு அளிக்க கேட்டிருந்த கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர்' என்றனர்.

மேலும், ‘பி.எம். ஸ்ரீ’ பள்ளித்திட்டத்தை நிறுவினால், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது வரும். இதனால் தமிழக அரசின் இரு மொழிக்கொள்கைத் திட்டம் என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்ததால், தமிழக அரசு இந்த விஷயத்தில், அந்த திட்டத்தை ஏற்காமல் தன்னுடைய நிலையில் உறுதியாக உள்ளது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால், மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இனி வரக்கூடிய மாதத்தில் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதில் சிக்கல் ஏற்படும் எனவும், இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் படிப்பதற்கான கட்டணம் செலுத்துதல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory