» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு 160-ஐ கடந்தது: 2வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

புதன் 31, ஜூலை 2024 12:18:38 PM (IST)



வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இன்று இரண்டாம் நாளாக மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 

மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வானிலை முன்னேற்றம் இருந்தால் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் ராணுவம் சார்பில் வயநாட்டை எளிதில் அடைய தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் நடைபெறும் மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக சென்ற சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜின் கார் மலப்புரம் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது. இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 143 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 190 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். '91 பேரது நிலை தெரியவில்லை' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும் (ஜூலை 31) கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory