» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கியில் 17¾ கிலோ தங்க நகைகள் கொள்ளை : ஜன்னல் கம்பியை வெட்டி கைவரிசை!

புதன் 30, அக்டோபர் 2024 8:36:33 AM (IST)



கர்நாடகாவில் ஜன்னல் கம்பியை வெட்டி உள்ளே புகுந்து எஸ்.பி.ஐ. வங்கியில் 17¾ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி டவுன் நேரு நகரில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) வங்கியின் கிளை அமைந்துள்ளது. இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வங்கி மூடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை வங்கி ஊழியர்கள் வழக்கம் போல வங்கிக்கு வந்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. 

மேலும் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. அத்துடன் வங்கியில் மிளகாய் பொடியும் தூவப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், வங்கி உயர் அதிகாரிகளுக்கும், நியாமதி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் வங்கியில் பார்வையிட்டு ஆய்வு ெசய்தனர். அப்போது வங்கியின் பின்புற ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கிடந்தது. அத்துடன் வங்கியில் உள்ள 2 லாக்கர்களில் ஒரு லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் நள்ளிரவில் கியாஸ் கட்டர் மூலம் வங்கியின் ஜன்னல் கம்பிகளை வெட்டி உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் லாக்கரையும் கியாஸ் கட்டர் மூலம் ெவட்டி அதில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அந்த லாக்கரில் மொத்தம் 509 பைகளில் இருந்த 17 கிலோ 705 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். மற்றொரு லாக்கரை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த பல கோடி ரூபாய் ரொக்கம் தப்பியது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு ெசய்தனர். ஆனால் கேமராவில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைக்கப்படும் டி.வி.ஆர். கருவியையும் மர்மநபர்கள் எடுத்து சென்றிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த வங்கிக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. போலீசில் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக வங்கி முழுவதும் மர்மநபர்கள் மிளகாய் பொடியை தூவி ெசன்றிருந்தனர். இதனால் மோப்ப நாய்கள், மோப்பம் பிடிக்க முடியாமல் திணறின. இதையடுத்து தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கியின் உள்ளேயும், வெளியேயும் தடயங்களை தேடினர். ஆனால் அவர்களுக்கும் தடயங்கள் எதுவும் சிக்கவில்லை.

இதனால் மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க சரியாக திட்டமிட்டு வங்கியில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அத்துடன் கொள்ளை நடந்த வங்கி, குடியிருப்பு பகுதியில் இருந்து ெவகு தொலைவில் உள்ளது. வங்கியை சுற்றி மரங்கள் உள்ளன. அங்கு இரவு நேர காவலாளி கிடையாது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், எந்தவித பதற்றமும் இன்றி வங்கியில் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவே மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கொள்ளை நடந்த வங்கிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்து ெகாண்டார்.

இதையடுத்து எஸ்பி உமா பிரசாந்த் உத்தரவின் பேரில் மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நியாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory