» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜிநாமா!
சனி 20, ஜூலை 2024 4:22:18 PM (IST)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவர் மனோஜ் சோனி, பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்பாகவும் தேர்ச்சி பெற்றுப் பணியிலிருப்பவர்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் பெருகிவரும் நிலையில் இவருடைய ராஜிநாமா பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கர் போலிச் சான்று அளித்து படிப்பில் சேர்ந்தது புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்துள்ளதாகவும், போலி சான்றிதழ் விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என மனோஜ் சோனி விளக்கம் அளித்துள்ளார்."மனோஜ் சோனி பதினைந்து நாட்களுக்கு முன்பே தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார். அது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை," என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தைச் சேர்ந்த கல்வியாளர் மனோஜ் சோனி (59), 2017 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அவர் யுபிஎஸ்சி தலைவராக 2023 மே 16 ஆம் தேதி பதவியேற்றார், மேலும் அவரது பதவிக் காலம் 2029 மே 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஆனால், சோனி யுபிஎஸ்சி தலைவராக தொடர்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், தன்னை அந்த பதவியில் இருந்து விடுவிக்குமாறு கோரியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்போதும் அவரது இன்னமும் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சோனி தற்போது "சமூக - மத நடவடிக்கைகளுக்கு" அதிக நேரம் ஒதுக்க விரும்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சோனி மூன்று முறை பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்துள்ளார். ஆகஸ்ட் 1, 2009 முதல் ஜூலை 31, 2015 வரை, குஜராத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறையும், ஏப்ரல் 2005 முதல் ஏப்ரல் 2008 வரை பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒரு முறையும் பதவி வகித்துள்ளார்.
மகாராஜா சாயாஜிராவ் பல்கலை துணைவேந்தராக பதவியேற்றபோது இந்திய பல்கலைக்கழகங்களிலேயே இளம் துணைவேந்தராக அறியப்பட்டவர் சோனி.ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட யுபிஎஸ்சியில் தற்போது, ஏழு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கா் சிக்கினாா். இதைத் தொடா்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி கிரீமி லேயர் அல்லாதவர்கள்) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (ஈடபிள்யூஎஸ்), மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி தலைமையிலான ஒருநபா் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு இரு வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், ‘பூஜா கேக்தா் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவா் தன்னுடைய பெயா், தந்தை மற்றும் தாயாரின் பெயா்கள், கையொப்பம், புகைப்படம், மின்னஞ்சல், கைப்பேசி எண் மற்றும் முகவரி என அனைத்தையும் மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதைப் பயன்படுத்தி தோ்வு விதிகளின்கீழ் நிா்ணயிக்கப்பட்டதைவிட அதிக முறை குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் அவா் தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
தோ்வுகளை முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதில் பொதுமக்கள் மற்றும் தோ்வா்களின் நம்பிக்கையை பெற்று விளங்கும் அமைப்பாக யுபிஎஸ்சி திகழ்ந்து வருகிறது. எதிா்காலத்திலும் எவ்வித சமரசங்களுக்கும் இடமளிக்கப்படாமல் நியாயமான முறையிலேயே தோ்வுகள் நடத்தப்படும் என யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான சலுகையைப் பெற்று அகில இந்திய அளவில் 821-ஆவது இடத்தைப் பிடித்து பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பூஜா கேத்கா் புணேயில் பணியாற்றி வந்தாா்.
இந்த இடஒதுக்கீட்டை கோருபவா்களுக்கு வயதுவரம்பு உள்பட பிற சலுகைகளை யுபிஎஸ்சி வழங்குகிறது. இதை தவறாகப் பயன்படுத்தி பூஜா கேத்கா் பணியில் சோ்ந்தது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தோ்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் எழுப்பப்பட்டு வரும் நிலையில், சோனி ராஜிநாமாவுக்கும் பூஜா கேத்கா் விவகாரத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை ” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தோ்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் மீது தில்லி குற்றப்பிரிவு காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.