» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒடிசாவில் 46 ஆண்டுகளுக்கு பிறகு புரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறை மீண்டும் திறப்பு

வெள்ளி 19, ஜூலை 2024 8:21:13 AM (IST)

ஒடிசாவில் உள்ள புரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறையில் (ரத்ன பண்டார்) கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறை கடைசியாக கடந்த 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜனதா அரசு ரத்ன பண்டாரை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி ரத்ன பண்டார் திறக்கப்பட்டது.

சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர். அன்றைய தினம், ரத்ன பண்டாரின் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைத்து தற்காலிக ரகசிய அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் ரத்ன பண்டார் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அரசின் உயர்மட்டக்குழுவினர் காலை 9.51 மணிக்கு ரத்ன பண்டாரை திறந்தனர். அதன் பின்னர் ரத்ன பண்டாரின் உட்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக ரகசிய அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவின் தலைவரும், ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் வைத்த கோரிக்கையின் பேரில் புரி மன்னர் கஜபதி மகாராஜா திவ்ய சிங் தேப், ரத்ன பண்டாரில் இருந்து தற்காலிக ரகசிய அறைக்கு ஆபரணங்கள் மாற்றப்பட்டதை நேரில் ஆய்வு செய்தார்.
இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். 

மேலும் ரத்ன பண்டாரில் பாம்புகள் இருக்கலாம் என நம்பப்படுவதால் பாம்பு பிடிப்பவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். ரத்ன பண்டாரின் உள்அறையில் இருந்து ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மாற்றும் போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாரம்பரிய உடையுடன் ரத்ன பண்டாருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக பூரி கலெக்டர் சித்தார்த் ஷங்கர் ஸ்வைன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory