» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி!
வியாழன் 18, ஜூலை 2024 5:29:48 PM (IST)
உத்தரப் பிரதேசத்தில திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில சண்டீகர் - திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர். 20 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோடிகஞ்ச் - ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பிற்பகல் 2.35 மணிக்கு திப்ரூகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக காவல்துறையின் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. இந்த விபத்தில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழு விரைந்துள்ளது. மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. 40 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் சம்பவப் பகுதிக்குச் சென்றுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.
உ.பி. யில் நடந்த ரயில் விபத்து தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குவாஹாட்டி ரயில் நிலைய உதவி எண்கள் - 0361 - 2731621, 0361 - 2731622, 0361 - 2731623.
வணிகக் கட்டுப்பாட்டு அறை: 9957555984, தின்சுகியா: 9957555959, திப்ரூகர்: 9957555960.
பொதுமக்கள் இந்த உதவி எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.