» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தில் 2200 பணிகளுக்கு 25 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்!
புதன் 17, ஜூலை 2024 12:38:02 PM (IST)
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 2,216 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்காக சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
நாட்டில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி அவ்வப்போது குரல் எழுப்புகின்றன. சமீபத்தில் குஜராத்தில் 10 காலி பணியிடங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய காட்சிகள் வைரலானது.
அந்த வகையில், தற்போது மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் பங்கேற்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்ஜை கையாள்பவர்கள் உள்ளிட்ட 2,216 பணியிடங்களுக்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. அவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்க சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் கையில் சான்றிதழ்களுடன் மும்பை விமான நிலையத்தில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் வேலைத்தேடி வந்த இளைஞர்கள் சிக்கித்தவித்தனர். அனைவரையும் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள செய்வது கடினம் என்ற நிலையில், இளைஞர்கள் தங்களின் சுய விவரங்களை (ரெஸ்யூம்) பெட்டியில் போட்டுச் செல்லுமாறு விமான நிறுவனம் அறிவுறுத்தியது. நேர்முகத்தேர்வுக்கு திடீரென 25 ஆயிரம் இளைஞர்கள் அங்கு கூடியதால் அந்த இடமே பரபரப்பானது.