» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போலி சான்றிதழ் சர்ச்சை: பூஜா கேத்கரின் ஐஏஎஸ் பயிற்சி நிறுத்திவைப்பு
புதன் 17, ஜூலை 2024 11:54:50 AM (IST)
போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கரின் ஐஏஎஸ் பயிற்சியை நிறுத்தி வைப்பதாக மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பூஜா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பூஜா கேத்கருக்கு மகாராஷ்டிர கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின் கத்ரே அனுப்பியுள்ள கடிதத்தில், "உங்களின் உதவி ஆட்சியர் பயிற்சி திட்டத்தை நிறுத்திவைக்க முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கழகம் முடிவு செய்துள்ளது. வரும் 23-ம் தேதிக்கு முன் லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கழகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.