» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வகுப்பறையில் மாணவனை கொடூரமாக தாக்கி பல்லை உடைத்த ஆசிரியர் கைது!
வியாழன் 11, ஜூலை 2024 12:02:01 PM (IST)
ரேபரேலியில் வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவனை கொடூரமாக தாக்கி பல்லை உடைத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியரான முகமது ஆசிப், கோடை விடுமுறையில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு வகுப்பில் உள்ள ஒரு மாணவன் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் வீட்டுப்பாடத்தை முடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவன் மயங்கி கீழே விழுந்தார். மாணவனின் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மாணவனின் பல் உடைந்தது. மாணவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவனை மீட்டு மருத்துமவனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிபை நேற்று கைது செய்தனர்.