» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தானை காங்கிரஸ் அரசு அழிவுக்குள் தள்ளிவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:38:47 PM (IST)
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழிவுக்குள் தள்ளிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் கட்சி வெற்றிகரமான ஒரு அரசை அமைத்தது. என்றாலும் அசோக் கெலாட் அரசு சரியாக செயல்பட தவறிவிட்டது. கெலாட் தனது நாற்காலியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினார். மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரது பதவியை பறிப்பதில் தீவிரம் காட்டினர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழிவுக்குள் தள்ளிவிட்டது. குற்றங்களின் எண்ணிக்கை பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருப்பது எனக்கு மிகுந்த வலியைத் தருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெரும்பாலானவை ராஜஸ்தானில் இருந்து வருகிறது. இதற்காகவா நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள்?
உதய்பூரில் என்ன நடந்தது. இப்படி நடக்கும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? அந்த கடைக்கு சிலர் துணி தைக்க வருகிறார்கள். பின்னர் டெயிலர் கண்ணையா லாலின் கழுத்தை அறுக்கிறார்கள், அந்த வீடியோவை பகிர்கிறார்கள். ராஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருப்பதை அசோக் கெலாட் அறிந்திருக்கிறார். அதனால் தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த பின்னரும், அவரது திட்டங்களை நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். ராஸ்தானில் பாஜக ஆட்சி அமையும் என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டதற்காக கெலாட் ஜிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எந்த ஒரு பொதுவானத்திட்டங்களும் நிறுத்தப்படாது என்று நான் உறுதி அளிக்கிறேன். அவை மேலும் மேம்படுத்தப்படும் இது மோடி ஜியின் உறுதி.
நாங்கள் ராஜஸ்தானின் இளைஞர்களுக்கு உறுதியளிக்கிறோம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பேப்பர் லீக் விவகாரத்தின் அடிமட்டம் வரை விசாரணை நடத்துவோம். எளிய மக்களின் பணத்தினைக் கொள்ளையடித்த ஊழலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" இவ்வாறு பிரதமர் பேசினார்.
முன்னதாக, ராஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், "இன்று அர்ப்பணிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ராஜஸ்தானில் அதிவேக விரைவு சாலைகள், விரைவு சாலைகள், ரயில்வே போக்குவரத்து போன்ற நவீன உள்கட்டமைப்புகளை வளர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. ராஸ்தானில் கடந்த காலத்தின் பாரம்பரியம், நிகழ்காலத்தின் வலிமை, எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகள் ஆகிய மூன்றும் உள்ளன. ராஜஸ்தானின் இந்த ‘திரிசக்தி’நாட்டின் வலிமையை அதிகப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
ராஜஸ்தானில் பிரதமர் இன்று ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நத்துவாரா (ராஜ்மந்த்)வில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வளர்ச்சி, நத்துவாராவில் உள்ள சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம், கோடாவில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன (ஐஐஐடி) வளாகத்தின் நிரந்தர கட்டிடம் உள்ளிட்ட திட்டங்களை இன்று துவக்கி வைத்தார்.