» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பயனடையும் : டி.கே.சிவக்குமார்
வியாழன் 1, ஜூன் 2023 4:38:43 PM (IST)
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் பயனடையும் என கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; "மேகதாது திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான திட்டம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் பயனடையும். மேகதாதுவால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசன நீர் மற்றும் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது தனக்கு கோபமோ, வெறுப்போ இல்லை. மேகதாது திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் நான் முறையிடுவேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.