பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி ஒருவர் அவரது வீட்டின் முன்பாகவே 2 நண்பர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ். இவரது மகன் சாலமன் சாம் பிரபாகர் (34). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சாலமன் சாம் பிரபாகர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாகப் பாளையங்கோட்டை காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுப் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவில் சாலமன் சாம் பிரபாகர் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் சாலமன் சாம் பிரபாகரனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் முற்றித் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 2 நண்பர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துச் சாலமன் சாம் பிரபாகரனைச் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பாளையங்கோட்டை ஆய்வாளர் முத்து கணேஷ், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட சாலமன் சாம் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்துப் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை நகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, தப்பியோடிய 2 நண்பர்களையும் பிடிப்பதற்குத் தீவிர வலைவீசி வருகின்றனர்.

