வங்கி மேலாளரைத் தாக்கிய வழக்கில், தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை அடையாறு காந்திநகர் பகுதியில், தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கட்டிடத்தில் உள்ள லிப்ட் பழுது குறித்து கயல்விழியின் உதவியாளரிடம் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், லிப்ட் பழுதைச் சரி செய்யாததால், வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் இது குறித்து கயல்விழியிடம் நேரடியாகப் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி அலுவலகத்திற்கு நேரில் வந்து வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கைக் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், சாஸ்திரி நகர் போலீசார் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணையை நிறைவு செய்த சாஸ்திரி நகர் போலீசார், சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 19) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.