இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் ஆதிக்கம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் அது முழுமையாக விடைபெற்றுவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக மேகக் கூட்டங்கள் உருவாகி வருவதால், கடந்த ஒரு வார காலமாகக் கேரளம் மற்றும் இலங்கை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுக்கு அருகில் காற்றின் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகச் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (புயல் சின்னம்) உருவாகும் வாய்ப்புள்ளதாக அகில இந்திய வானிலை இலாகா தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாகத் தமிழகத்தில் வெகுவிரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அக்டோபர் 15 முதல் 21-க்குள் பருவமழை தொடங்கும் என வானிலை இலாகா முன்னறிவிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களில் கனமழை பெய்யத் தொடங்க எதிர்பார்ப்புள்ளது. அக்டோபர் 14 முதல் 18 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 2-ம் வாரம் வரை நீடித்ததுடன், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 43 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

