தேசிய பாடலான வந்தே மாதரத்தின் அனைத்துச் சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் தண்டனைச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இப் பாடலைப் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை மற்றும் அப்பாடலுக்குத் தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கும் சமீபத்திய சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்துக் கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டி.எம். கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர் தாக்கல் செய்த அம்மனுவில், "வந்தே மாதரம் பாடலின் நான்கு சரணங்கள் இந்து தெய்வங்கள் மீதான பக்தி உணர்வை வெளிப்படையாக வலியுறுத்துகின்றன. எனவே, அப்பகுதிகளைக் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது. தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வந்தே மாதரம் பாடலையும் கொண்டு வருவதற்கான திருத்தம் தன்னிச்சையானது; இது தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சட்டத்தின் தண்டனை அம்சங்கள் குறித்து ஆராய ஒப்புக்கொண்டனர்.
மேலும், வந்தே மாதரம் தேசிய பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறிய நீதிபதிகள், மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-ன் கீழ் அடிப்படை உரிமைகள் குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தனர்.
விசாரணையின் போது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி சுட்டிக்காட்டியதாவது: "வந்தே மாதரம் பாடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரணங்களைப் பாட விரும்பாதவர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படக் கூடாது.
முந்தைய 'பிஜோ இம்மானுவேல்' வழக்கில் தேசிய கீதம் பாடாத நபர்களுக்குப் பாதுகாப்பு அளித்த உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது. அந்தச் சட்ட அறிவிப்பே இந்த விவகாரத்திலும் பொருந்தும் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

