தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முழுமையான சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "நாட்டின் கிழக்குக் கடற்கரையில் மாற்று கடல்சார் எரிபொருட்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இம்மையத்தில் தலா 750 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதன் மொத்த சேமிப்புக் கொள்ளளவு 1,500 கன மீட்டராகும்.

சேமிப்புப் பகுதியிலிருந்து கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் துறைமுகத் தளத்தை இணைக்கும் வகையில் 2.8 கி.மீ. நீளமுள்ள குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 1,20,000 லிட்டர் மெத்தனாலை அனுப்பும் திறன் கொண்ட இரண்டு பம்புகள் நிறுவப்பட்டுள்ளன. தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகள், தொலைவிலிருந்து இயக்கக்கூடிய வால்வுகள், அவசரகால நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் தீத்தடுப்பு அமைப்புகள் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

ரோட்டாடாம் - தூத்துக்குடி - சிங்கப்பூர் சர்வதேசக் கடல்வழிப் பாதையில் வ.உ.சி துறைமுகம் அமைந்துள்ளதால், இப்பாதையில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களுக்குத் தடையின்றி எரிபொருள் வழங்க முடியும். இம்மையம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் சேவையை வழங்கும் ஒரே துறைமுகமாக வ.உ.சி துறைமுகம் திகழும்.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் ரூ.35.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வ.உ.சி துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகள் நிறைவுபெறும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் இந்தியா இலக்காக நிர்ணயித்த 2070ஆம் ஆண்டுக்குள் 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' (Net Zero Emission) என்ற தேசிய இலக்கை அடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.