தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான அருள்மிகு பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலையில் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நவம்பர் 3ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாலை அருள்மிகு சங்கரராமேசுவரர் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பாகம்பிரியாள் அம்பாளுக்குக் காட்சி கொடுக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் வைபவமும் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து, நேற்று இரவு 8 மணி அளவில் திருக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில், வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கச் சங்கரராமேசுவரர் - பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்தின் போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண சடங்குகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இரவு 9.30 மணி அளவில் மணக்கோலத்தில் சுவாமியும் அம்பாளும் பூம்பல்லக்கில் எழுந்தருளி பட்டணப்பிரவேசம் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோவில் முதன்மை வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த வீதியுலாவில் வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

