நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தைச் சீரமைக்க ரூ.3.01 கோடியில் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இதில் பங்கேற்றுள்ளது குறித்து சமூக ஆர்வலர் மு. சுகன் கிறிஸ்டோபர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH-138) அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சேதங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு அச்சம் குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) செயல்பாடுகளுக்கு எதிராக 'வீ த லீடர்ஸ்' அமைப்பு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாலத்தின் இடதுபுறப் பாதையில் உள்ள 8 Deck Slab பகுதிகளை நிரந்தரமாகச் சீரமைக்க NHAI டெண்டர் அறிவித்துள்ளது: இதன் மதிப்பீடு: ரூ.3,01,19,970. பணிக்காலம்: 90 நாட்கள். சென்னையைச் சேர்ந்த M/s HPR Construction நிறுவனம் ரூ.2,98,18,770-க்கு (GST தவிர) ஏலம் எடுத்துள்ளது. இத்தேர்வில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீ த லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலரான மு. சுகன் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள் மற்றும் கேள்விகள்:
மீண்டும் மீண்டும் சேதம் ஏன்?: ஏற்கெனவே பல கோடி ரூபாய் (சுமார் ரூ.4 கோடி மற்றும் ரூ.13.28 கோடி) செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், பாலம் மீண்டும் சேதமடைவதற்கான தொழில்நுட்பக் காரணம் என்ன?
8 Slab பகுதிகள் மட்டுமா?: குறிப்பிட்ட 8 Deck Slab பகுதிகள் மட்டுமே சேதமடைந்துள்ளன என்பதற்கு என்ன ஆதாரம்? முழுப் பாலத்திற்கும் விரிவான கட்டமைப்புப் பாதுகாப்பு ஆய்வு (Structural Condition Assessment) மேற்கொள்ளப்பட்டதா?
பொறுப்பு யாருடையது?: முந்தைய பணிகளின் தரம் மற்றும் முந்தைய ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு என்ன? தற்போதைய பணிகளுக்குப் பிறகு பாலம் மீண்டும் சேதமடையாது என்பதற்கு NHAI என்ன உத்தரவாதம் அளிக்கிறது?
ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் இப்பாலத்தின் பாதுகாப்பில் சமரசமின்றி, சுயாதீன நிபுணர் குழு மூலம் முழுமையான கட்டமைப்புப் பாதுகாப்புத் தணிக்கை (Safety Audit) நடத்தப்பட வேண்டும் என்றும், ஒப்பந்த விவரங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அறிக்கைகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

