முதல்வர் விஜய் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், "முதலமைச்சர் வரை எல்லோருமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்" எனக் குறிப்பிட்டு நடிகர் ராமரும் அந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில், சின்னத்திரை நகைச்சுவை நடிகர் ராமர் பேசிய பிரபல வசனத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் மேடையில் பேசிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் ராமர் பாணியில் பேசிய முதல்வர் விஜய்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாகாபாவைக் கலாய்ப்பதற்காக நகைச்சுவை நடிகர் ராமர் பேசிய "அய்யய்யோ... வந்துட்டாரே... கலாய்ப்பாரே..." என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. சமீபகாலமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பதற்காக விஜய் ரசிகர்கள் இந்த வசனத்தை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், புத்தகங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கோப்புகளைத் (Files) திறந்து பார்க்கச் சொன்னது குறித்துப் பேசினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "அய்யய்யோ... வந்துட்டாரே... கலாய்ப்பாரே..." என நடிகர் ராமர் பாணியில் பேசி, அதற்கேற்ற முகபாவனைகளையும் செய்து காட்டினார்.

முதலமைச்சர் விஜய் பேசிய இந்த வீடியோ வெளியானவுடன், அவரது ரசிகர்கள் அதனைச் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அதேநேரம், முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்குத் திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் காரசார விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்த வசனத்திற்குச் சொந்தக்காரரான நடிகர் ராமர், முதல்வர் விஜய் பேசிய வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், "முதலமைச்சர் வரை எல்லோருமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ள அவரது பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.