தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை மற்றும் புதிய மழைநீர் வழித்தடங்கள் உருவாக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தூத்துக்குடி மாநகராட்சி முழுமையாகத் தயாராக உள்ளது.
வல்லநாடு ஆற்றுப்படுக்கையில் நீர்வரத்து குறைந்தபோதிலும், கிட்டாச்சி மூலம் உரைக்கிணறுகள் அமைத்துத் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த கால கனமழை அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப் புதிதாக 14 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு, கோரம்பள்ளம் உப்பாற்று ஓடை மற்றும் அத்திமரப்பட்டி பகுதிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் மற்றும் மீளவிட்டான் பகுதிகளில் இருந்து வரும் மழைநீரைத் திரேஸ்புரம் வழியாகக் கடலுக்கு அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழைக்காலப் பணிகளுக்காக 36 மின் மோட்டார்கள், கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், அவசர தேவைகளுக்கு மாநகராட்சி தொடர்பு எண் அல்லது தனது தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.. ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

