"இன்று தவெக இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்று பேச ஆட்கள் தேவை", "வெற்றி பெறாது என எதிர்த்துப் பேச ஆட்கள் தேவை" என்று கருத்துகளைப் பேசுவதற்கென்றே ஆட்களைப் பிடிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னை நகரின் அசோக் பில்லர், போரூர், வடபழனி போன்ற பகுடிகளில் அதிகாலை 6 மணிக்கெல்லாம் சில காட்சிகளை நாம் இயல்பாகக் காண முடியும். கையில் சிறிய வயர் கூடைகளோடும் டிபன் பாக்ஸ்களோடும் நடுத்தர வயதுடைய அல்லது வயதான ஆண்களும் பெண்களும் சிறிய குழுக்களாகக் காத்திருப்பார்கள்.
அங்கே வரும் மினி வேன்களில் இருந்து இறங்கும் நபர்கள், ஈஞ்சம்பாக்கத்தில் கொத்தனார் வேலை, பாலவாக்கத்தில் பிளம்பிங் வேலை, திருவான்மியூரில் எலக்ட்ரீசியன் வேலை என ஆட்களை அழைத்துச் செல்வார்கள். நாள் முழுவதும் கடுமையாக உழைத்து விட்டு மாலையில் வீடு திரும்பும்போது அவர்களுக்குரிய கூலி வழங்கப்படும். ரூ.500 கூலி என்றால் அதில் ரூ.50 அல்லது ரூ.100 சூப்பர்வைசருக்குக் கமிஷனாகச் செல்லும்.
இவர்கள் அனைவரும் தங்களின் உண்மையான உடல் உழைப்பைச் சிந்தி, நேர்மையாகச் சம்பாதிக்கும் அன்றாடங்காய்ச்சிகள். பொய் சொல்லிப் பிழைப்பவர்கள் அல்ல! ஆனால், தற்போதைய சமூக ஊடகக் காலத்தில் ஒரு புதிய வகையான கும்பல் உருவாகியுள்ளது. யூடியூப் சேனல்களிலும் ஊடக விவாதங்களிலும் "இன்று தவெக இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்று பேச ஆட்கள் தேவை", "வெற்றி பெறாது என எதிர்த்துப் பேச ஆட்கள் தேவை" என்று கருத்துகளைப் பேசுவதற்கென்றே ஆட்களைப் பிடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இன்று பலர் பல்வேறு ஊடகச் சேனல்களுக்குச் சென்று, அந்தந்தச் சேனல்களின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் தங்கள் கருத்துகளை 'வாடகைக்கு விட்டு', அன்றைய நாளுக்கான கூலியைப் பெற்றுத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் போன்ற பகுதிகளில் இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஊடகங்களில் பேசுவதற்குக் கூட ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலைக்கு அரசியல் விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன என்ற விமர்சனம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

