தமிழ்நாடு உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு "வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை" என்ற திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், அமைச்சர் கடந்த 25.08.2026 அன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையின்போது, "உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டுதோறும் தற்போது வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

அதன்படி, உப்பளத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இதன் படி 2026–2027-ம் ஆண்டில் 23,979 உப்பளத் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டிற்கு ஏற்படும் ரூ.16.78 கோடி செலவை அரசே ஏற்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.